52 தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் களாக பதவி உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நாளை (திங்கள்கிழமை) தங்களுக்கான பணியிடங்களில் சேர வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழகம் முழுவதும் 75 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால், கல்விப் பணிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து, புதிய மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான பட்டியலுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. இந்தப் பட்டியல் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது.இதில் 12 இடங்கள் நேரடி நியமனத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மீதமுள்ள 11 காலியிடங்கள் குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் தங்களுக்கு கூடுதல் பணியிடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
| |
தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை தமிழகம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் தனியாகவே இருந்து வந்தது. இதை தவிர்க்க, அனைத்து குழந்தைகளுக்கும் சமவாய்ப்பு கிடைக்க நடப்பு கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகளில், தேர்வு செய்யப்பட்ட 320 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தலா 2 பிரிவுகள் ஆங்கில வழி கல்வியில் இருக்கும். இதுவரை ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லை. தற்போது இந்த பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 23 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். துவக்கப் பள்ளி நிலையிலேயே இந்த ஆண்டு ஆங்கில வழி தொடங்கப்பட்டதால் 24 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக ஆங்கில வழியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் கோவையில் தொடக்கக் கல்வி இயக்குனரின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 24 வகையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது 10 துவக்கப் பள்ளிகளை ஆங்கில வழி இணைப்பு பள்ளிகளாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ள பள்ளிகளின் முழு விவரங்களையும் ஜனவரி மாதத்திற்குள் மாநில தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் அவரவர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலா 10 துவக்கப்பள்ளிகள் வீதம் மாவட்டம் முழுவதும் 100 பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூறுகையில், ‘மாவட்டத்திற்கு 100 பள்ளிகள் என்றாலும் 32 மாவட்டத்திற்கும் 3,200 தொடக்கப் பள்ளிகள் ஆங்கில வழி இணைப்புப் பள்ளிகளாக அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும். ‘ என்றனர். இணைப்பு பள்ளி என்றால் என்ன? தொடக்க பள்ளிகளில் தமிழ் வழி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில், ஆங்கில வழியில் படிக்க விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, அதே பள்ளியில் அவர்களுக்கு ஆங்கில வழியில் தனியாக வகுப்புகளை நடத்துவது இணைப்பு பள்ளி (பேரலல் இங்கிலீஷ் மீடியம்) என்று அழைக்கப்படுகிறது. ஆங்கில வழியில் கற்க மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினால், பின்னர் அதே வளாகத்தில் தனியாக கட்டிடமும் கட்டப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். | |
2013 மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் ஜனவரி 7 முதல் 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார். 2013 மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் ஜனவரி 7 முதல் 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இந்தத் தேர்வில் ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சிப் பெறாதவர்கள் தனித்தேர்வர்களாகவும் (எச் வகையினர்), பத்தாம் வகுப்புத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் இடைவெளியும், 1.4.2013-ம் தேதி 16 1/2 வயதும் பூர்த்தியடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாகவும் (எச்பி வகையினர்) விண்ணப்பிக்கலாம். நேரடித் தனித்தேர்வர்கள் வரலாறு, பொருளியல் உள்ளிட்ட ஐந்து வகையான பாடத்தொகுப்புகளில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் தமது புகைப்படத்தை "அப்லோடு' செய்து, முழுமையான விவரங்களைப் பூர்த்திசெய்த பிறகு, அவர்களுக்கான விண்ணப்ப எண் வழங்கப்படும். இந்த விண்ணப்ப எண்ணை தனித்தேர்வர்கள் உடன் குறித்துக்கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, புகைப்படத்துடன் விவரங்களைப் பதிவு செய்த விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய சலானையும் பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும். இந்த விண்ணப்பத்தை நகலெடுத்து தேர்வர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணைப் பயன்படுத்தியே எந்தவொரு சந்தேகங்களுக்கும் தேர்வுத்துறையிடம் முறையீடு செய்யவோ, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் புகைப்படத்தை ஒட்டி, அதில் கடைசியாகப் பயின்ற பள்ளித் தலைமையாசிரியரிடம் சான்றொப்பம் பெறுதல் வேண்டும். தேர்வுக் கட்டணம்: மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.150-ம், இதர கட்டணம் ரூ.35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ.2 என மொத்தமாக ரூ.187 செலுத்த வேண்டும். கோர் பேங்கிங் சேவை உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளையில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய இறுதி தேதி ஜனவரி 19 ஆகும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இடங்கள்: சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள், அங்குள்ள மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களிலும், இதர மாவட்டங்களிலிருந்து விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் அவரவர் மாவட்டத்திலுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் ஜனவரி 7 முதல் 19-க்குள் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய நகல்கள்: வங்கிச் சலான், சான்றொப்பமிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழின் நகல், பள்ளித் தலைமையாசிரியரிடம் இருந்து பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவர்களாகப் பதிவு செய்து தேர்வு எழுதாதவர்களுக்கு மட்டும்), செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறைப் பாடங்கள் உள்ள தேர்வுகள் எழுதுவோர் மட்டும்) இணைத்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நேரடித் தனித்தேர்வர்களுக்கு வங்கிச் சலான், பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாறுதல் சான்றிதழின் அசல், இடப்பெயர்வு சான்றிதழ் (வெளிமாநில மாணவர்கள் மட்டும்) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். | |
2 ஆண்டுகளில் புதிதாக 92 கல்லூரிகள் துவக்கம் அனைத்து தரப்பினரும் உயர்கல்வி பெரும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது," என, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் உள்ள தனியார் பல்கலை.,யில் நடந்த விழாவில், அவர் பேசுகையில், "தமிழகத்தில் உயர்கல்வி மேம்படுத்தும் முயற்சியில், அரசு ஈடுபட்டு வருகிறது. நகர்புறங்களுக்கு இணையான கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைத்திட, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கலை, அறிவியல், பாலிடெக்னிக் உட்பட 92 புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. 50க்கு மேற்பட்ட புதிய பாடங்களும், 299 புதிய பாடத்திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 2,200 கல்லூரிகளும், விளையாட்டு, கல்வியியல் உட்பட 14 பல்கலை கழகங்களும் செயல்பட்டு வருகிறது சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் உயர்கல்வி பெரும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார். | |
30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. சுறுசுறுப்பு கடந்த ஆண்டில், தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு, 24 ஆயிரம் பேரை தேர்வு செய்து, சாதனை படைத்த, டி.என்.பி.எஸ்.சி., நடப்பு ஆண்டில், 30 ஆயிரம் பேர் வரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசின் பல்வேறு துறைகளில் தேவைப்படும், பணியாளர் எண்ணிக்கை குறித்த விவரங்களை பெற்று, தேர்வாணையம் இறுதி செய்துள்ளது.இது குறித்த அறிவிப்பு, பொங்கலுக்குப் பின் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. சில ஆண்டுகளாக, தமிழக அரசின் பல்வேறு துறைகளில், புதிய பணியாளர்களை நியமனம் செய்யும் பணி, வேகம் எடுத்து வருகிறது. கடந்த 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. துறை வாரியாக, காலியாக உள்ள பணியிடங்கள் கணக்கு எடுக்கப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., மூலமும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையிலும், பல்வேறு வகையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அரசுப் பணிகள், தொய்வின்றி, முழுவீச்சில் நடப்பதற்கு வசதியாக, காலிப் பணியிடங்களை நிரப்புவதில், முதல்வர் ஜெயலலிதா, தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், பட்டதாரிகள், மிகுந்த உற்சாகத்துடன், பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, அரசுப் பணிகளில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி., மூலமாக அரசு பணியாளர்களும், டி.ஆர்.பி., மூலமாக ஆசிரியர்களும், கணிசமான எண்ணிக்கையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நடராஜ் பதவி ஏற்றதில் இருந்து, தேர்வு நடத்துவதிலும், முடிவை உடனுக்குடன் வெளியிட்டு, பணி நியமன உத்தரவுகளை வழங்குவதிலும், தேர்வாணையம் வேகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, குரூப்-2 பணியிடங்கள், 10 ஆயிரத்து 500, குரூப்-4 நிலையில், 10 ஆயிரத்து 718 இடங்கள், 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்கள் உட்பட, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு ஆண்டில், புதிய பணி நியமனம் செய்வதற்காக, துறை வாரியாக உள்ள காலி பணியிடங்கள் விவரங்களை, தேர்வாணையம் கேட்டு பெற்றுள்ளது. அதன்படி, 30 ஆயிரம் பேர் வரை, நடப்பு ஆண்டில் தேர்வு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழுமையான அறிவிப்பு, பொங்கல் பண்டிகை முடிந்ததும் வெளியாகும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது, இந்த ஆண்டு முழுவதும், எத்தனை வகையான தேர்வுகள் நடக்கும், ஒவ்வொரு தேர்விலும், எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர், தேர்வு அறிவிப்பு, தேர்வு நடக்கும் தேதி, முடிவு அறிவிப்பு, பின் கலந்தாய்வு, பணி நியமனம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய ஆண்டு தேர்வு அட்டவணையை, தேர்வாணைய தலைவர் நடராஜ் வெளியிடுவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய தேர்வு அறிவிப்பில், குரூப்-4 நிலையிலான காலி இடங்கள், எண்ணிக்கை கணிசமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், குரூப்-2 தேர்விலும், அதிகளவில் தேர்வர்கள் தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளன என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி முதல், பட்டதாரிகள் வரை படித்தவர்கள், இப்போதே போட்டித் தேர்வுகளுக்கு தயாராக ஆரம்பித்து விடலாம். தொடர்ச்சியாக, பல்வேறு போட்டித் தேர்வுகள் நடப்பதால், தேர்வாணையத்தின் புதிய அறிவிப்பை, பயிற்சி மைய நிர்வாகிகளும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். | |
பள்ளி மாணவிகளுக்கு பிரத்யேக பேருந்து: புதுச்சேரி அரசு அறிவிப்பு பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர், மொபைல் போன் கொண்டு வருவது தடை செய்யப்படுவதுடன், அடுத்த கல்வியாண்டிலிருந்து, மாணவியருக்கு தனியாக பேருந்துகள் இயக்கப்படும்,' என, கல்வியமைச்சர் தியாகராஜன் கூறினார். புதுச்சேரி அரசுப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி, கடந்த 1ம் தேதி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரிடம் ஒழுக்கத்தை மேம்படுத்துவது குறித்து, மேல்நிலைப் பள்ளி முதல்வர்களுடன், கல்வியமைச்சர் தியாகராஜன், துறை செயலர் மற்றும் இயக்குனர், நேற்று கலந்துரையாடல் நடந்தினர். பின்னர் அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது: பள்ளி மாணவ, மாணவியரிடம் ஒழுக்கத்தை மேம்படுத்த, சில நடவடிக்கைகளை அமல்படுத்த உள்ளோம். மாணவ, மாணவியர், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வருவது தடை செய்யப்படும். மீறி கொண்டு வருகின்றனரா என்பதை, பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்படும். அரசு சார்பில், இயக்கப்படும் மாணவர் சிறப்பு பேருந்துகளை, அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவியருக்குத் தனியாகவும் இயக்கப்படும். இந்த பேருந்துகளில், வெளி நபர்கள் பயணிக்கின்றனரா என்பதும் கண்காணிக்கப்படும். மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை, பெற்றோருக்குத் தெரியப்படுத்திய பிறகே நடத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல், மாணவியருக்கு, "ஓவர் கோட்" வழங்கப்படும். எட்டு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு உடல், மன நலத்திற்கான கவுன்சிலிங் அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். |
MODEL QUESTIONS FOR SSLC
PALLI.IN
Sunday, January 6, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment