அரசு மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலத்தில் 30.11.12 உலக வாசிப்பு தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியர் S.பரந்தாமன் முன்னிலையில் ஆறு முதல் பதினொன்றாம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களையும் ஒன்றாக மைதானத்தில் அமரச் செய்து சிறுவர்களுக்கான வார ,மாத இதழ்கள். நூலகத்தில் உள்ள புத்தகங்கள் என ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புத்தகத்தை அளித்து ஆசிரியர்கள் படித்தலின் பயன்களை விளக்கி மாணவர்களைப் படிக்க செய்தனர்.
MODEL QUESTIONS FOR SSLC
PALLI.IN
Friday, November 30, 2012
Thursday, November 29, 2012
வாசித்து மகிழ்வோம்
அரசு மேல் நிலைப் பள்ளி,சத்தியமங்கலம்
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்...
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.
சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.
"போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது.தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.
சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து "அப்படிப்போடு...........அப்படிப்போடு" என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.
திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.
முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.
அம்மா சொல் கேள்!
செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது.ஓநாயும் "நண்பா, நண்பா...இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை....." என்று வருத்தத்துடன் கூறியது."அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி."சேச்சே...அதெலாம் சுத்தப் பொய்!" என்றது ஓநாய்."அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!" என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று."உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை...அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?
அன்பின் மதிப்பு
குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.
ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.அவன் மன்னனிடம், "அரசே........உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்" என்றான்.
அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.
மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், "அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?" என்று கேட்டார். மன்னனோ, "அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது" என்று கூறினான்.நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.
Wednesday, November 28, 2012
BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம்மாணவர்களுக்கான விடுதிகள் கட்ட அரசு நிதி ஒதுக்கிசெய்தி வெளியீடு |
அரசு Cable TV மூலம் கல்வித்தொலைக்காட்சிஅலைவரிசையினை SSA மூலம் தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளிகளுக்கு வழங்க அரசாணை வெளியீடு |
கலை பண்பாட்டு ஆசிரியர் பதிவு மூப்புசென்னை கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் குரலிசை, தேவாரம், வயலின், நாதஸ்வரம், பரதநாட்டியம் மற்றும் தவில் பாடங்களுக்கு, ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர். 1.7.2012 அன்று 30 வயது முடிந்த, 58 வயது நிறைவடையாதவராக இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 20.11.2012 வரை பதிவு செய்தவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி வரையுள்ள பதிவுதாரர்கள், பதிவை இன்று (நவம்பர் 27) நேரில் பதியலாம் என வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரன் தெரிவித்துள்ளார். |
64 உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கநவ., 30 கடைசிதமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படும் 64 வகையான உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்பிஏ பொது, எம்பிஏ ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், எம்.எஸ்சி யோகா, யோகா தெரபி, சைக்காலஜி, யோகா நேச்சுரோபதி, டிப்ளமோ இன் யோகா, பிட்னஸ் அண்டு நியூட்ரிஷன் உள்ளிட்ட 64 வகையான எம்.பி.ஏ., எம்.எஸ்சி, பி.எஸ்சி., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் உடற்கல்வி படிப்புகள் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கான காலம், தகுதி, கல்விக் கட்டணம், விண்ணப்ப படிவம் போன்ற விவரங்களை பெற www.tnpesu.org என்ற இணையதளத்தை பார்க்கவும். |
அரசு சிறார் காப்பகங்கள்: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவுஅரசு சிறார் காப்பகங்களின் செயல்பாடுகளை, மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்" என, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ராயபுரம், எஸ்.என். செட்டி தெருவில் உள்ள, அரசு சிறார் காப்பகத்தில் இருந்து, கடந்த, ஜூன் மாத இறுதியில், 34 சிறார்கள், நள்ளிரவில் தப்பினர். இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம், சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு துறை செயலர்களுக்கு, "நோட்டீஸ்' அனுப்பியது. அதிகாரிகள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில், அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயந்தி, பிறப்பித்துள்ள உத்தரவு: அரசு சிறார் காப்பகங்களில் உள்ள பிள்ளைகளுக்கு, சுகாதாரமான குடிநீர், சத்தான உணவுகளை வழங்குவதுடன், மாதம் இருமுறை, அவர்களுக்கு, மனநல ஆலோசனை,யோகா மற்றும் தியானப் பயற்சி அளிக்க வேண்டும். கழிவுநீர் பாதையை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட, காப்பக துப்புரவு பணிகளில், சிறார்களை ஈடுபடுத்தக் கூடாது. சிறார்கள், தங்கள் குறைகளை தெரிவிக்க, அனைத்து காப்பகங்களிலும், புகார் பெட்டி வைக்க வேண்டும். மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகங்களில், மாதம் ஒருமுறையாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.மேலும், மாவட்ட கலெக்டர்கள், காப்பகங்களின் செயல்பாடுகளை, தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
நடைமுறைக்கு வராத அரசாணை :பார்வையற்ற பட்டதாரிகள் அவதிபார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை இன்னும் நடைமுறைக்கு வராத நிலை தொடர்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கல்வி பயிலவும், பணியில் சேரவும், 1 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, 2006ல் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் படி, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால், மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர். குறிப்பாக,"நெட், ஸ்லெட்&' தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பிஎச்.டி., பயில இடம் கிடைப்பதில்லை. இதே போல, ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், ஆசிரியராக பணியமர்த்தப்படுவதில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பும் போதும், 1 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப் படுவதில்லை. அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களும், இதுவரை பணியமர்த்தப்படாமல் உள்ளனர். தமிழகத்தில் செயல்பட்டு வரும், பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளிகளில், 42 சதவீதம் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என, 2002ல் வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உத்தரவும், அமலுக்கு வரவில்லை. முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வு ஊதியமாக, 1,000 ரூபாய் வழங்கப்படுவது போல, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் உதவித் தொகையை, 450 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். பார்வையற்ற மாற்றுத் திறனாளியை திருமணம் செய்து கொள்ளும், பார்வையுள்ளவர்களின், கல்வி தகுதிக்கேற்ப, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும், பார்வையற்ற மாணவர்களுக்கான, கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகையை, இருமடங்காக உயர்த்தி தர வேண்டும். பார்வையற்ற மாணவர்களின் பாட நூல்களையும், மின் நூல்களாக மாற்றி, பேசும் மென்பொருள் பொருத்தப்பட்ட மடிக்கணினியை இலவசமாக வழங்க வேண்டும் என, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, பார்வையற்ற பட்டதாரிகளுக்கான கலை, இலக்கிய சங்கத்தினர் கூறியதாவது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, முதல்வரின் தனிப்பிரிவு, சமூகநலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காக மூன்றாண்டுகளாக அரசுடன் போராடி வருகிறோம். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்த உள்ளோம்,இவ்வாறு அவர் கூறினார். |
கல்வித் துறையில் நிரப்பப்படாத 1,200 கருணைபணியிடங்கள்கல்வித் துறையில், கருணை அடிப்படையிலான, 1200 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இயக்குனர், கூடுதல் இயக்குனர், சி.இ.ஓ., தொடக்க கல்வி அலுவலகங்களில் 15 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பணி நியமனங்களில், 25 சதவீத காலியிடங்களை கருணை அடிப்படையில் காத்திருப்போருக்கு ஒதுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்ட போதும், 1997 முதல், கருணை அடிப்படையில் காத்திருப்பவர்களுக்கு பணி வழங்காததால் காலிப்பணியிடம் 1200 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் பால்ராஜ் கூறியதாவது: இத்துறையில் உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில், 8 ஆயிரம் இடங்கள் வரை காலியாக உள்ளன. 15 ஆண்டுகளாக இப்பணியிடங்களை நிரப்பவில்லை. அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் உள்ளதால், அதிக இழப்புகளும் இந்த துறையில்தான் ஏற்படுகிறது. இதனால், 25 சதவீதம் இடஒதுக்கீடு என்பதையும் அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். |
முப்பருவ கல்வி: புத்தகங்களுக்கு ஒப்புதல் பெறடிசம்பர் 7 கடைசிமுப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை, ஒப்புதல் பெற, வரும், டிசம்பர் 7ம் தேதி கடைசி நாளாகும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் தலைவர் வெளியிட்ட அறிக்கை: மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டத்தின் அடிப்படையில், 1 முதல் 8 வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீங்கலாக, இதர பாடப் புத்தகங்களை, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில், தயார் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர், பாடப் புத்தகங்களின், இரண்டு நகல்களை, "உறுப்பினர் - செயலர் மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6&' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பாடப் புத்தகங்கள், மல்டி கலரிலும், ஏ4 அளவிலும், 80 ஜி.எஸ்.எம்., ஹைடெக் மப்லித்தோ பேப்பரிலும், சிடிபி பிரின்டிங்கிலும், 200 ஜி.எஸ்.எம்., வர்ஜின் கேட்டெட் போர்டு அட்டையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் தோராய விலை குறிப்பிட வேண்டும். ஒன்று முதல் 8ம் வகுப்புகளுக்கு தமிழ் பாடம் நீங்கலாக இதர பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்க வேண்டும். வரைவு பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது. 7ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக www.dse.th.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. |
Subscribe to:
Posts (Atom)